Tuesday 10 September 2019

அன்பிற்கினிய தோழர் தோழியர்களே வணக்கம்   

GDS பணியிட 
மாறுதல் குறித்தான வழக்கின்விவரங்கள்.

பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்த GDS ஊழியர்கள் பெரும்பாலானோருக்கு அஞ்சல் துறையின் தமிழ் மாநில நிர்வாகம் பணியிட மாறுதல் வழங்க மறுத்திருந்தது. நமது AIGDSU  தமிழ் மாநில சங்கம் நமது ஊழியர்களுக்கு பணியிடமாறுதல் வாங்கித்தர பல்வேறு முயற்சிகளை எடுத்து இறுதிக்கட்டமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்த GDS ஊழியர்கள் சிலரும் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர்.


இலாகா தரப்பு நீதிமன்றத்தில் முறையான பதிலை வழங்காமல் GDS ஊழியர்களை ஏமாற்றும் நோக்கோடு இழுத்தடிப்பு செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 20/08/2019 அன்று நீதிபதி இடைக்கால ஆணை பிறப்பித்துள்ளார்.


இந்தத் தீர்ப்பின் விவரங்கள் பின்வருமாறு,


தீர்ப்பில் இதுவரை பணியிடமாறுதல் விவகாரத்தில் நடந்த அனைத்து நடவடிக்கைகளையும்,கேரளாவில் முன்னரே பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, புதிய விதிகளின் படி இந்த ஆண்டு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதையும் நமது வழக்கறிஞர் எடுத்துரைத்ததை பதிவு செய்துள்ள நீதிபதி, 


அதற்கடுத்தபடியாக, "பணியிட மாறுதல் தொடர்பாக புதிய ஆணை வெளியிடப்பட்டுள்ளதால் புதிய விதிமுறைப்படி அனைவரும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், அதே நேரத்தில் 4000க்கும் மேலான பணியிடங்களையும் நிரப்பி அந்தப் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதால், யாருக்கும் பணியிட மாறுதல் வழங்க முடியாது" என இலாகா அளித்த பதிலையும் பதிவுசெய்துள்ளார். 


இதன் பின்னர் நீதிபதி தனது கருத்தாக, GDS ஊழியர்களுக்கு பணியிட மாறுதல் பெற விதிகள் இருந்தும், இலாகா வேண்டுமென்றே பணி இடமாறுதல் விண்ணப்பங்களை  பரிசீலிக்காமல் இருந்துள்ளது என்றும், அவ்வாறு பரிசீலிக்காமல் இருந்ததற்கான முறையான காரணம் ஏதும் இலாகா  தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் மத்திய அமைச்சரகமே 15.04.2019 அன்று, 04.01.2019 அன்று அல்லது அதற்கு முன்பாக பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, பணியிட மாறுதல் வழங்க எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பணியிடமாற்றம் வழங்காமல், அனைத்து பணியிடங்களுக்கும் புதிய நபர்களை பணியில் சேர்க்க, தமிழ் மாநில அஞ்சல் துறை நிர்வாகம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டது, தன்னிச்சையாக செய்த அதிகார துஷ்பிரயோகம் என நீதிபதி தெரிவித்துள்ளார். பணியிட மாற்றம் கேட்டவர்களுக்கு கொடுக்காமல் அந்த இடங்களில் புதியவர்களை பணிக்குச் சேர்த்தால், பணியிடமாற்றம் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு அது பேரிடியாக அமையும் என்றும், பணியிட மாற்றங்களுக்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் ஊழியர்களே ஏற்கும் நிலையிலும், 150க்கும் மேற்பட்டவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படாமல் உள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இறுதியாக தனது தீர்ப்பாக, 04.01.2019 அன்று அல்லது அதற்கு முன்பாக பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ள காலியிடங்களில், நீதிமன்றத்தின் ஆணையின்றி, புதிய நபர்களை பணியில் சேர்க்க கூடாது என்று ஆணையிட்டுள்ளார். அதோடு 28.10.2019 அன்று நீதிமன்றத்தில் இலாகா 04.01.2019 க்கு முன்னர் எத்தனை பணியிடமாற்றம் விண்ணப்பங்கள் வந்துள்ளன, ஏன் இது நாள் வரைக்கும் பரிசீலிக்க படாமல் வைக்கப்பட்டன என விளக்கத்தை சமர்பிக்குமாறு ஆணையிட்டுள்ளது.

என்றும்   GDS ஊழியர்கள் நலனில் உங்கள் 
 *எம்.பாஸ்கரன்* *மாநிலசெயலர்* 
அகில இந்திய உதவி பொதுச் செயலாளர்  *தமிழ்மாநிலம்* சென்னை...






No comments:

Post a Comment