நமது மத்திய சங்க செயற்குழு கூட்டம் அகில இந்திய தலைவர் தோழர் M இராஜாங்கம் அவர்கள் தலைமையில் 26.02.2017, 27.02.2017 இரு தினங்கள் கரூர் நாரத கான சபாவில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
இந்தியா முழுவதுமிலிருந்து 21 மாநில செயலர்களும், அனைத்து மத்திய சங்க செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஏழாவது ஊதியக்குழு கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகள் பற்றியும், புதிய உறுப்பினர் சேர்க்கை, கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
துணைப்பொதுச் செயலாளர் B V ராவ், பொதுச் செயலாளர் S S மஹாதேவய்யா ஆகியோரின் விரிவான விளக்கவுரைக்கு பின் கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமுல் படுத்திட வேண்டியும், பாதகமான பரிந்துரைகளை கலைந்திட வேண்டியும் இலாகாவுக்கு நெருக்குதல் கொடுத்திடவும், முதல் கட்டமாக மார்ச் 10 ஆம் தியதி முதல் கோட்ட மட்டத்தில் விளக்க கூட்டங்கள் நடத்திடவும், மார்ச் 29 அன்று இந்தியா முழுவதும் கோட்ட அலுவலகங்கள் முன்பு ஒரு நாள் தர்ணா போராட்டம் நடத்திடவும்,ஏப்ரல் 6 அன்று பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்திடுவது என்றும் அதன் பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பினை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக தமிழ் மாநில கோட்ட/கிளை செயலர்கள் கூட்டம் 26.02.2017 அன்று மாலை 4.00 மணி அளவில் நடைபெற்றது. மாநில செயலர் A இஸ்மாயில் தமிழ் மாநிலத்தின் பிரச்சனை பற்றியும் கமலேஷ் சந்திரா அறிக்கை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். கோட்ட கிளை செயலர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் மத்திய சங்க செயற்குழு முடிவுகளை ஏற்றுக்கொள்வதோடு, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பினை வெளியிட மத்திய சங்கத்தை தமிழ் மாநில சங்கம் வலியுறுத்திட வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து நிகழ்வுகளிலும் மாநில சங்க ஆலோசகர் R ஜான் பிரிட்டோ, முன்னாள் துணைப்பொதுச் செயலர்கள் C அமிர்தலிங்கம், பன்னீர் செல்வம், சட்ட ஆலோசகர் வாசுதேவன், முன்னாள் NCA பேரவை தலைவர் முத்து சுவாமி, தோழர் சின்னி கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநிலத்தில் நடைபெற்ற மத்திய சங்க செயற்குழுவினை சிறப்பாக ஏற்பாடு செய்த கரூர் கோட்ட சங்க நிர்வாகிகளுக்கும், கோட்ட செயலர் தோழர் C கருணாநிதி அவர்களுக்கும் மாநில சங்கம் வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
மாநில செயலர் A இஸ்மாயில் நன்றியுரையுடன் விழா இனிது நிறைவுற்றது.
A இஸ்மாயில்
மாநில செயலர்.